சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பெயர் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து நடைமேடைகளிலும் வைக்கப்பட்டுள்ள புதிய பெயர் பலகை.படம்: ம.பிரபு
சென்னை பாரிமுனையில் ஏற்பட்ட நெரிசலைக் குறைக்க, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் 37 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 1999 ஜூன் 6-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். ரூ.103 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை, 2002 நவம்பர் 18-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இது, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி) என்றே அழைக்கப்பட்டு வந்தது.
கடந்த 30-ம் தேதி சென்னை யில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல் வர் கே.பழனிசாமி, ‘கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், ‘புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்’ என பெயர் மாற்றப்பட்டு, நேற்று பெயர்ப்பலகை பொருத்தப் பட்டது.