சென்னை: வங்கக்கடலில், சென்னைக்கு அருகில் உருவான, ‘தித்லி’ புயல், அதிதீவிரமாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், அதன் பாய்ச்சலில் இருந்து, தமிழகம் தப்பியது. அதே நேரத்தில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி, அப்புயல் ஆவேச பயணம் மேற்கொண்டுள்ளதால், அம்மாநிலங்களுக்கு, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.தென் மேற்கு பருவ மழை, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பரவலாக கன மழையை கொட்டியுள்ளது. மழை ஓய்ந்த பின், வானிலை ஆய்வாளர்களுக்கு சவால் விடும் வகையில், மீண்டும், தென் மேற்கு பருவக் காற்று வலுப்பெற்றுள்ளது. இதனால், கன்னியாகுமரிக்கு மேற்கில், அரபிக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது, படிப்படியாக வலுப்பெற்று, ‘லுாபன்’ என்ற, அதிதீவிர புயலாகியுள்ளது.மூன்று நாட்களாக, அரபிக்கடலில் சுழன்று, நேற்று மாலையில், ஓமனில் இருந்து, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. வரும், 14ம் தேதி, ஓமன் மற்றும் ஏமன் இடையே, கரையை கடக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், வங்கக்கடலில், சென்னைக்கு தென் கிழக்கில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தித்லி என்ற பெயருடன், அதிதீவிர புயலக மாறியுள்ளது. இது, சென்னை அருகே உருவானாலும், சென்னையின் பக்கம் திரும்பாமல், வட கிழக்கு மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளதால், தமிழகம் தப்பியது.நேற்று மாலை, ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, 200 கி.மீ., துாரத்தில் புயல் மையம் கொண்டிருந்தது.

மணிக்கு, 14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து, இன்று ஆந்திராவின் வடக்கு மற்றும் ஒடிசாவின் தெற்கு கரைகளை, தித்லி தாக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், குர்தா, நயாகார் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில், கடும் பாதிப்பு ஏற்படும் என, சிவப்பு அபாய குறியீட்டில், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில், நாளை வரை, மீன் பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒடிசாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தள அரசு எடுத்து வருகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில், வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

பல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உ.பி., மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள், வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டு உள்ளன.@lock@தமிழகத்தில் நிலவரம் என்ன? தமிழகத்தின் சில இடங்களில், மிதமான மழை பெய்து வருகிறது. வரும், 14ம் தேதி முதல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது, பெரிய அளவிலான வானிலை எச்சரிக்கை ஏதும் இல்லை. கடலோரத்தில் இருந்து, தொலைவில் உள்ள மாவட்டங்களில், வெயில் அதிகரிக்கும். கடலோர பகுதிகளில், தித்லி புயல் கரையை கடக்கும் வரை, மழையின் அளவு குறைவாகவே இருக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *