சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் டிசம்பர் முதல் அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட துணை முதன்மைப் பொறியாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அரக்கோணம்-தக்கோலம் புதிய இரும்புப் பாதை அமைக்கப்பட்டு, அதன் சோதனை ஓட்டம் அரக்கோணம் ரயில்நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இச்சோதனை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் சென்னை கோட்ட துணை முதன்மைப் பொறியாளர் ஜெய்சங்கர் கூறியதாவது:

இப்பாதையில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஒரு சில தினங்களில் இப்பாதை மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் ஒரு சில வாரங்களில் நிறைவடையும். இதைத் தொடர்ந்து, நடைபெறும் பணிகளுக்கு பிறகு டிசம்பரில், சென்னை கடற்கரை-காஞ்சிபுரம் ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்படும்.

மேலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம்-சென்னை கடற்கரை சர்க்குலர் ரயில் இயக்கப்படும் என்றார் அவர்.

அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் பெருமூச்சி வழி பாதை மின்மயமாக்க கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே நிர்வாகம் முனைந்த நிலையில் அப்பாதை மின்மயமாக்கப்பட்டால், அது தங்களது விமான இயக்கத்தைப் பாதிக்கும் என அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், 6.5 கி.மீ தூரம் உள்ள இப்பாதையை மாற்றி பருத்திபுத்தூர் வழியாக 9.8 கி.மீ. தூரத்துக்கு அமைத்துக்கொள்ள ரயில்வே நிர்வாகம் தெரிவித்த ஆலோசனையை ஏற்ற ராஜாளி நிர்வாகம், இப்பணிக்காக ரூ. 23.75 கோடியை முதல் தவனையாக கடந்த 2002-ஆம் ஆண்டிலும், அதன்பின் ரூ. 30.80 கோடியை இரண்டாவது தவணையாக 2016-ஆம் ஆண்டிலும் என மொத்தம் ரூ. 54.25 கோடியை ரயில்வே நிர்வாகத்திடம் வழங்கியது. இதற்கான பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்ற நிலையில், தற்போதுள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரேஷ்த்தா, தான் பொறுப்பு ஏற்றவுடன் இப்பணிகளை துரிதப்படுத்தினார். இதையடுத்து தற்போது அரக்கோணம்-தக்கோலம் இடையே பருத்திபுத்தூர் வழியில் புதிய இரும்புப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

சோதனை ஓட்டத்துக்காக அலங்கரிக்கப்பட்ட ரயில் என்ஜினுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் மனோகரன், போக்குவரத்து ஆய்வாளர் ரகு, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் கென்னடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *