அரக்கோணம் செல்வதற்கான புதிய ரயில்பாதை பணிகள் நிறை வடையும் நிலையில் உள்ளதால், காஞ்சியிலிருந்து அரக்கோணத்துக்கு விரைவில் மின்சார ரயில் தொடங்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2000-ம் ஆண்டில், செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில்பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டு, செங்கல்பட்டிலிருந்து தக்கோலம் வரை உள்ள பாதை மின் மயமாக்கப்பட்டது. இந்நிலையில், அரக்கோணம் அருகே அமைந்துள்ள (ஐஎன்எஸ்) ராஜாளி விமானப்படைத்தள அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அப்பகுதியில் ரயில்பாதையை மின் மயமாக்க அனுமதிக்கவில்லை.

இதனால், தக்கோலத்திலிருந்து அரக்கோணம் செல்ல மாற்றுவழியாக 9.8 கி.மீ. தூரம் ரயில்பாதை அமைக்கவும் ரயில்வே மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைகள் இணைந்து ரூ.54.57 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

இதில், பாதுகாப்புத் துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.23.75 கோடி நிதி அளிக்கப்பட்டது. இதன்மூலம், கடந்த 2007-ம் ஆண்டு ரயில்வே துறை தக்கோலத்திலிருந்து பொய்கைபாக்கம், மேல் பாக்கம் வழியாக அரக்கோணத் துக்கு செல்லும் வகையில் 9.8 கி.மீ. தண்டவாளம் அமைத்தது.

ஆனால், நிலுவையில் உள்ள ரூ.30.80 கோடி நிதியை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், சென்னையிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அதேவழியாக சென்னைக்கு திரும்பிச் சென்று வருகின்றன.

இந்நிலையில், இந்திய பாதுகாப்புத் துறை கடந்த 2016-ம் ஆண்டு ரூ.30.80 கோடி நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டமும் நடைபெற் றுள்ளது. இதனால், காஞ்சி புரத்திலிருந்து அரக்கோணத் துக்கு விரைவில் மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை தகவல் தெரிவித் துள்ளது.

ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தக்கோலம்-அரக்கோணம் இடையேயான மாற்று வழித் தடத்தில் இருப்புப்பாதை, சிறிய பாலம் போன்ற பணிகள் நிறைவடைந்து, மின்கம்பிகள் மற்றும் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இவை, இந்த ஆண்டுக் குள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அதனால், காஞ்சிபுரம்-அரக்கோணம் இடையே விரைவில் மின்சார ரயில்கள் இயக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

காஞ்சிபுரம் ரயில் பயணிகள் சிலர் கூறும்போது, “காஞ்சியிலிருந்து அரக்கோணத்துக்கு மின்சார ரயில் இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரி வருகிறோம். சுற்று வட்டப்பாதை திட்டத்தின் மூலம் அந்தக் கோரிக்கை நிறைவேறப் போவது குறித்து மகிழ்கிறோம். அதனால், தாமதப்படுத்தாமல் பணிகளை விரைவாக முடித்து ரயில்களை இயக்க வேண்டும்” என்றனர்.

1 thought on “காஞ்சியில் இருந்து அரக்கோணத்துக்கு விரைவில் மின்சார ரயில்

  1. சென்ற ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அரக்கோணம் – காஞ்சிபுரம் இடையே மின்சார ரெயில் சேவை துவங்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ஆவது புதிய ரயில் சேவை துவங்கும் என்று மக்கள் இடையே எதிர் பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *