சென்னை: போலி டிரைவிங் லைசென்ஸ்களை தடுக்கவும், காணாமல் போகும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் வசதியாக, நாடு முழுவதும், ஒரே மாதிரியாக, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகங்கள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை, அடுத்தாண்டு ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும், தினமும், 32 ஆயிரம் பேர், டிரைவிங் லைசென்ஸ் பெறுகின்றனர்; 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எனினும், ஒவ்வொரு மாநிலத்துக்கும், வெவ்வேறு விதமான சாலை போக்குவரத்து சட்டங்கள் மற்றும் வாகன பதிவு முறைகள் உள்ளன.அதனால், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்படுகின்றன. விபத்து, திருட்டு, கடத்தல் போன்ற சம்பவங்களில், பிற மாநில வாகனங்கள் மற்றும் டிரைவர்களின் தகவல்களை பெறுவதில் தாமதமும், சட்ட சிக்கலும் ஏற்படுகிறது.மென் பொருட்கள்இந்தப் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தாண்டு, ஏப்., முதல், நாடு முழுவதும் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், லைசென்ஸ் மற்றும், ஆர்.சி., புத்தகங்கள் வழங்க, ‘சாரதி, பரிவாகன்’ என்ற, மென்பொருட்கள் அறிமுகமாகி உள்ளன.
இந்த நடைமுறையில், தகவல்கள் அனைத்தும், மத்திய, சேமிப்பகத்தில் சேகரிக்கப்படுகின்றன.இதையடுத்து, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில், ஒரே மாதிரியான லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகங்கள் வழங்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டின் சின்னமும், அந்தந்த மாநில அரசு சின்னங்களும் இடம் பெறும். இதிலுள்ள, ‘சிப்’பில், தகவல்கள் பதிவாகி இருக்கும்.அதாவது, டிரைவிங் லைசென்சில், டிரைவர் பெயர், பிறந்த தேதி, ரத்த வகை, முகவரி, உடல் உறுப்பு தானம் செய்ததற்கான அடையாளம், ஆதார் எண் இணைக்கப்பட்ட விபரம் உள்ளிட்டவை, இடம் பெறும்.
கட்டணம்ஆர்.சி., புத்தகத்தில், வாகன பதிவு எண், இன்ஜின் எண், சேஸ் எண், இன்ஜின் தொழில்நுட்பம் குறித்த விபரங்கள் இருக்கும்.ஸ்மார்ட் கார்டில் உள்ள, பார்கோடு, கியூ.ஆர்., கோடுகளை ஸ்கேன் செய்த உடன், அனைத்து தகவல்களும் வந்து விடும். இது, போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும். இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு ஜூலை முதல், அமலுக்கு வரவுள்ளது.டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகம் புதுப்பிப்போருக்கு, புதிய லைசென்ஸ் வழங்கப்படும். அதற்கு, 20 முதல், 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கனவே, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் பெற்றவர்கள், ஸ்மார்ட் கார்டுக்கு மாறவும், வழிவகைகள் செய்யப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.