திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று, தங்க ரதத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்த எம்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8வது நாளான இன்று காலை 32 அடி உயரமுள்ள, பாயும் குதிரையுடன் கூடிய ஸ்வர்ண ரதம் எனும் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரித்தானது என்பதாலும், மகாலட்சுமியின் செரூபமாக பெண்கள் விளங்குவதாலும், பெண் பக்தர்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுக்க, நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! எனும் பக்தி முழக்கத்திற்கிடையே தங்கரத வீதிஉலா நடைபெற்றது. சுவாமி வீதிஉலாவின்போது ஆந்திரா, கர்நாடக, கேரள, தமிழகம், தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கியபடி பங்கேற்றனர்.