நவராத்திரி விழாவின் இறுதி நாளான மகா நவமி, 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த நாளில், நோன்பிருந்து, நைவேத்யங்களைப் படைத்து, கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி ஆடி, பரவசமுடன் வணங்குவோருக்கு, கேட்ட வரத்தை தருவாள்.நாளை, அன்னையை ப்ராஹ்மி ஆக, சித்திதாத்ரியை வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவற்றை தரித்த கோலத்தில், அம்பிகையை பூஜிக்க வேண்டும். ஞானசொரூபமானவள் கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். எட்டு சித்திகளையும் உள்ளடக்கியவர், சித்திதாத்ரி என, கூறப்படுகிறது. தாமரை மீது வசிக்கும் இவளை, சாதுக்கள், யோகிகள், சித்தர்கள் வணங்குகின்றனர்.
சிவன் இவளை வழிபாடு செய்து, அனைத்து சித்திகளையும் பெற்று, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என்பது புராணம்.அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால் வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். நாளை, தொழிற்சாலைகளில் உள்ள பெரிய இயந்திரங்களையும், வாகனங்களையும், அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம்.இந்த எளிய விழாவின் நோக்கம், ‘வேலையை வழிபடு’ என்ற கோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.9ம் நாள் நவராத்திரி வழிபாடுபடிக்கும் புத்தகங்களை அடுக்கி, பேனா, பென்சில் போன்ற எழுதும் உபகரணங்களையும் அடுக்கி, அதன் மீது, சரஸ்வதி தேவியின் உருவப் படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து பூஜிப்பது வழக்கம்.
வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும், சந்தனம் குங்குமம் இடுவது வழக்கம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, சரஸ்வதி பூஜை அவசியம் செய்ய வேண்டும்.வண்டி வாகனங்களைத் துடைத்து, பொட்டு வைத்து, பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் கூட, ஆயுத பூஜை நடத்துவர். அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம் கலை சார்ந்த பொருட்களையும் வைத்து, பூஜை செய்யலாம்.பச்சைக் கற்பூரம் கொண்டு, ஆயுத கோலம் போடுவது சிறப்பு. மல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை, அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.பாசிப்பயறு சுண்டல், கல்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு, உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறி வகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம். இரு வேளையும் விளக்கேற்றி, சஹஸ்ரநாமம் சொல்லி, அம்பிகையைப் பூஜிக்கலாம்.
சண்டிதேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை முடித்த பின், பூசணிக்காய் குங்குமம் கலந்து வாசலில் உடைக்க வேண்டும். பிறர் பார்வையின் மூலம் நம்மை தாக்கும் பொறாமை போன்ற திருஷ்டிகள், இந்த பூசணிக்காய் சிதறி தெறித்து போவது போல், சிதறி விடும். உடைந்த பூசணிக்காயை, சிறிது நேரத்தில், சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விடுவது நல்லது. நம் மனித சமுதாயம் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் தான் இயங்குகிறது. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை, நம் வாழ்வில் ஏற்றுவாள்.’அறிவுடையார் எல்லாம் தனக்குரியார்’ என்பதற்கேற்ப, அறிவை பெற, சரஸ்வதியின் வழிபாடு அவசியம்.