வானிலை ஆய்வு மைய அறிவிப்பு: “வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு. கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 8-செ.மீ மழையும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 7-செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை அறந்தாங்கி, கன்னியாகுமரி இரணியல், ராமநாதபுரம் தொண்டி, நாகர்கோவில் மற்றும் சின்னக்கல்லாரில் 5 செமீ மழையும், வால்பாறை, குன்னூர், குளச்சல், நீலகிரியில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.”