அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கொள்கை முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஹெச்1 பி விசா வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் விசா பெறுவதற்கான நடைமுறைகள் மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அமெரிக்க குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.
இதில் திறமையான மற்றும் மிகத்திறமையானர்கள் மட்டும் விசா பெறும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போதைய விசா சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் பெருமளவில் இந்தியர்களும் அவர்களின் ஐடி நிறுவனங்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ஹெச்1 பி பணி விசா பெற்ற வெளிநாட்டவரின் மனைவி அல்லது கணவருக்கு பணி வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.