உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 2ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, வீட்டு பாடம் தரும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், வீட்டு பாடம் என்ற பெயரில், மாணவர்களுக்கு அதிக சுமை கொடுப்பதாக, புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதி, &’2ம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வீட்டு பாடம் வழங்க கூடாது&’ என, உத்தரவிட்டார்.
அதேபோல், மாநில பாடத்திட்ட பள்ளிகளிலும், வீட்டு பாடம் வழங்க தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன் ஆகியோர் எடுத்த நடவடிக்கை காரணமாக, தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 2ம் வகுப்பு வரை, வீட்டு பாடம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பில், இன்னும் அது தொடர்கிறது. இதையடுத்து, மீண்டும், உயர் நீதிமன்றத்தை அணுகினர். உத்தரவை மீறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், &’உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், 2ம் வகுப்பு வரை, வீட்டு பாடம் தரக் கூடாது. இதை மீறும் பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்&’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது.