சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரியை உயர்த்தி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் சொத்துவரி ெதாடர்பான சுயமதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, சென்னையில் 8.5 லட்சம் பேர் தங்களின் சொத்துவரி சுயமதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்தனர். தொடர்ந்து, புதிய சொத்துவரி தொடர்பான விவரங்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், புதிய சொத்துவரி தொடர்பான அறிக்கையும் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதில், ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால், 15 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிய சொத்துவரியானது தாங்கள் செலுத்தி வரும் பழைய சொத்துவரியை விட பல மடங்கு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து சொத்துவரி கணக்கீடு செய்யும் முறையை அறிந்து கொள்ள மாநகராட்சி நிர்வாகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி இணையதளத்தில் Property Tax Calculator என்ற பிரிவில் சொத்துவரி கணக்கீடு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சொத்துவரி எண், குடியிருப்பின் வகை, இடத்தின் வகை உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்களின் பழைய சொத்துவரி எவ்வளவு, புதிய சொத்துவரி எவ்வுளவு என்ற தகவல்களை அறிய முடியும். மேலும், புதிய சொத்துவரி எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். கடந்த மாதம் இறுதியில் சொத்துவரி வசூல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. தினமும் சராசரியாக ₹3.50 கோடி வசூலாகி வருகிறது. இதுவரை ₹352 கோடி சொத்துவரி வசூலாகி உள்ளது. சொத்துவரி செலுத்துவதற்கான கால அவகாசம் உள்ளதால் இன்னும் 100 முதல் 200 கோடி வரை அதிகம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.