அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட 687 பேருக்கான நியமன ஆணை சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர்கள் பணியிடத்துக்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. இதில், தேர்வு செய்யப்பட்ட 687 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு மூன்றாம் நிலை ஆய்வக நுட்பநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 687 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
23,955 பேர் நியமனம்: இதில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை மக்களுக்கு தங்கு தடையின்றி உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2012-இல் தொடங்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இதுவரை 10,931 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள், இதரப் பணியாளர்கள் என மொத்தம் 23,955 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் வே.ராஜாராமன், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.