தமிழகமெங்கும் 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் 25 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்களுக்கான பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசியது:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 2,222 மாணவர்களும், 2,198 மாணவியரும் பங்குபெறும் இறகுப் பந்து, கூடைப் பந்து, கைப் பந்து, மேஜை பந்து, கபடி, கால்பந்து உள்ளிட்ட 12 வகை விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெற உள்ளன. இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கும், போட்டிகளை நடத்துவதற்கும் தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் காரணமாக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 12-ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 7-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 63-ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்புப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் 80 தங்கப் பதக்கமும், 67 வெள்ளிப் பதக்கமும், 59 வெண்கலப் பதக்கமும், மாணவியர் 135 தங்கப் பதக்கமும், 96 வெள்ளிப் பதக்கமும், 88 வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம், வெள்ளிப் பதக்கம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம், வெண்கலப் பதக்கம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு முடிந்தவுடன், தமிழகமெங்கும் 500 பட்டயக் கணக்காளர்கள், அதாவது ஆடிட்டர்கள் மூலம் 25 ஆயிரம் வணிகவியல் கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்களுக்கான பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி. பொன்னையா, ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *