ஆன்லைன் முறையில், மனு அளிக்கும் வசதியை, விரைவில், அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு துறைகளில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள வசதியாக, ‘பெட்டிஷன் பிராசசிங் போர்ட்டல்’ என்ற, புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. பிரத்யேக இணைய தளம் துவக்கப்பட்டு, சோதனை முயற்சியாக, இத்திட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி, வருவாய் துறை சேவைகள், கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் சார்ந்த புகார் மனுக்களை, ஆன்லைன் வாயிலாக தெரிவிக்கலாம். அடுத்தகட்டமாக, அரசின் அனைத்து துறைகளையும், இந்த இணையதளத்தில் சேர்க்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆன்லைன் திட்ட இணையதளத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இது குறித்து, வருவாய் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுமக்கள் தங்கள் புகார்கள், கோரிக்கை மனுக்களை, ஆன்லைன் முறையில் பதிவு செய்யலாம். எழுத்துப்பூர்வமாக பெறப்படும் மனுக்களையும், ஆன்லைன் திட்டத்தில், பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை, சம்பந்தப்பட்ட துறையினர் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க, இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மனுக்களின் நிலை குறித்து, மக்கள் அறிந்து கொள்ள முடியும். திட்டத்தை, அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்வது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போதைய நிலை ‘பெட்டிஷன் பிராசசிங் போர்ட்டல்’
*கோட்டாட்சியர் அலுவலகம்
*கலெக்டர் அலுவலகம்
*தாலுகா அலுவலகம்
*வருவாய் துறை சேவை
இனி என்னென்ன புகார் செய்யலாம்…!
* வருவாய் துறையில், ஜாதி சான்று போன்றபல்வேறு சான்றுகள் கிடைக்காதது பற்றி…
* பட்டா மாறுதல் விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்காதது; முதியோர், ஆதரவற்றோர் ஓய்வூதியம் கிடைக்காதது குறித்து
* தாலுகா அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள் குறித்து, கலெக்டர் அலுவலகத்துக்கு மேல் முறையீடு செய்ய
* நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், தவறுதலாக வழங்கப்பட்ட பட்டா குறித்து புகார் அளிக்க
* பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாவிட்டாலும், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களைசேர்க்காதது
* மருத்துவமனை வசதி குறைபாடு; முதியோர் மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை பெற முடியாதது; தகுதி இருந்தும், மருத்துவ படிப்புகளில் இடம் கிடைக்காதது
* கட்டணம் செலுத்தியும், வீட்டிற்கு குடிநீர் வராதது; மோசமான சாலைகள், அடிப்படை வசதிகள் இல்லாதது என, அந்தந்த துறை சார்ந்த சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் செய்யலாம்.