மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்விற்கு வரும் நவம்பர் 1 முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. அறிவித்துள்ளது.
12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த நுழைவுத் தேர்வை, மருத்துவ கவுன்சிலின் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. இதனிடையே சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது என்.டி.ஏ இத்தேர்வினை நடத்தவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் 2019 மே 5-ஆம் தேதியன்று என்.டி.ஏ நீட் தேர்வினை நடத்தவுள்ளது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதியன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.ஏ.-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nta.ac.in என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விபரங்களைப் பதிவு செய்யலாம். இதற்காக, நாடு முழுவதும் மொத்தம் 2,697 பள்ளிகளில் தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.