சென்னை: தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் புறநகர்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. ரயில்களில் இடம் கிடைக்காததால் காத்திருப்போர் பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்துக்கிடக்கின்றனர்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை செவ்வாய்க்கிழமையில் வந்தது வெளியூர் சென்று திரும்பும் மக்களுக்கு தங்களது விடுமுறையை திட்டமிட சரியாக அமைந்தது. அதிலும் குறிப்பாக திங்கட்கிழமையன்று அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் பெற்றோர் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் பண்டிகை கால விடுமுறையை சிறப்பாக திட்டமிட முடிந்தது.
சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் விஷயம் பண்டிகை கால விடுமுறைக்கு திட்டமிடுதல் மற்றும் போக்குவரத்துக்கு பேருந்து அல்லது ரயில் பதிவு செய்தல். அரசுப் போக்குவரத்து கழகம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை தமிழகம் முழுவதும் இயக்கியதால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு அது பயனுள்ளதாக இருந்தது.
எனினும் சிறப்பு பேருந்து, தனியார் ஆம்னி பஸ்கள், கார், வேன்கள் என்று பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர்களுக்கு மக்களை அழைத்து சென்ற வாகனங்கள் இன்று அதிகாலை முதல் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னையிலும் பண்டிகை கால கொண்டாட்டம் முடிந்து அலுவலகம் செல்வோர் அன்றாட பணிகளுக்குத் திரும்பி வருவதால் பிரதான சாலைகளில் வாகனங்களே தேனி போல சுறுசுறுப்பாக பறக்கின்றன. ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் பலர் இடம் கிடைக்காமல் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்கின்றனர்.