அக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர் குழந்தைகள் வளர்ப்பிலும் நலத்திலும் தாத்தா பாட்டி உடனிருந்தனர். அவர்களின் பராமரிப்பில் குழந்தைகள் நலமுடன் இருந்தனர். தற்போதைய சூழலில் தனிக்குடித்தனம், மற்றும் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய நிலையில் குழந்தைகள் நலம் என்பது சற்று கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது.
குழந்தைகள் நலனில் 3 ஆண்டுகள் என்பது மிக முக்கியமாக உள்ள ஆண்டாகும். சிறப்பு கவனம் அவசியமாகும். தடுப்பூசிகள் போடுவதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு சிறு நோய்களுக்காக கவனம் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படாமல் இருக்க தாய்மார்கள் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
குழந்தைகள் இருக்கும் அறை அவர்கள் பயன்படுத்தும் துணிகள் ஆகியவை சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க தாணியக் கஞ்சி காய்கறி சாதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
பணத்தின் முக்கியத்துவத்தை குழந்தை பருவத்திலேயே கற்றுத்தர வேண்டும். வேலைக்கு செல்லும் பெற்றோராக இருப்பினும் குழந்தைகளுடன் குறைந்தது 3 மணி நேரமாவது செலவிட வேண்டும். புரதச் சத்திற்கும் ஊட்டச்சத்திற்கும் மாவு என்று தனியாக தர வேண்டாம். நாம் தரும் உணவில் பருப்பு வகைகள்,கடலை வகைகள் பயறு வகைகள் உள்ளிட்டவைகளை சேர்த்து தரலாம்.
குழந்தைகள் நலம் என்றால் உடல் நலத்துடன் மன நலமும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் நல்ல மன நலத்துடன் இருக்க பெற்றோர்தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். குழந்தைகள் முன் பெற்றோர் சண்டை போடுவது, மோசமாக பேசுவது போன்ற செயல்கள் குழந்தைகளை பாதிக்கும். அதிக செல்லம் கொடுப்பது. அதிகமாக கண்டிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். குழந்தைகளின் நற்செயல்களை ஊக்கப்படுத்த வேண்டும். அடுத்த குழந்தைகளுடன் ஒப்பிட வேண்டாம்.
தற்போது குண்டான குழந்தைகள் அதாவது குழந்தை பருவத்திலேயே குண்டாக இருக்கும் பிரச்சினை உள்ளது. குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை சரியான அளவில் சரியான நேரத்திற்கு குழந்தைகளுக்கு தர வேண்டும்.
குழந்தைகள் எடை கூடாமல் இருக்க காலை உணவில் ஓட்ஸ் பால் பழம் தரலாம். குளிர் பானங்களை தவிர்த்து இயற்கை பழ ரசங்களை தரலாம். மதிய உணவில் காய்கறிகள், காய்கறி சூப், சாலட் காய்கறி சாதம், பச்சைக் காய்கறிகள் சேர்க்க வேண்டும்.
இரவு உணவில் கோதுமை உணவு முளை கட்டிய பயறு உள்ளிட்டவை சேர்க்கலாம். குழந்தைகள் நலமுடன் இருக்க அவர்கள் ஓடி ஆடி விளையாட வேண்டும். அவர்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட அனுமதிக்க வேண்டும். நடனம் நீச்சல், யோகா போன்ற பயிற்சிகள் செய்ய வைக்கலாம். குழந்தைகள் நலமுடன் இருக்க பெற்றோராகிய நாம் சிறு கவனத்தை அவர்கள் உடல் மற்றும் மன நலத்தில் செலுத்த வேண்டும்.