திருவண்ணாமலை : சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்புத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். நவம்பர் 23ஆம் தேதியன்று காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி எல்லை தெய்வங்களான துர்கையம்மன் உற்சவமும், பிடாரியம்மன் உற்சவமும், நேற்று விநாயகர் உற்சவமும் நடைபெற்றது.
இன்று அதிகாலை 5 மணி முதல் 6.15 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிராகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் தினசரி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முதல்நாளான இன்றைய இரவில் அதிகார நந்திமீது அமர்ந்த கோலத்தில் அண்ணாமலையார் புறப்பட்டு ஆலயத்தின் மாடவீதிகளில் உலா வருவார்.ஆறாம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
மகா தேரோட்ட நாளில் அன்று காலை தொடங்கி நள்ளிரவு நேரம் வரை ஐந்து தேர்கள் அடுத்தடுத்து உலா வருவதைக்காண கண்கோடி வேண்டும். கணபதி, முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சண்டிகேஸ்வரர் என ஐவரும் தனித்தனி தேரில் உலா வருவர். உண்ணாமலையம்மன் பவனி வரும் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட திருவிழாவான மகாதீப திருவிழா நவம்பர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அப்போது பஞ்ச மூர்த்திகளுக்கும் தீபம் காட்டப்பட்டு வழிபாடு செய்யப்படும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் அர்த்தநாரீசுவரர் திருக்காட்சி பக்தர்களுக்குக் கிடைக்கும். சிவனே மலை ரூபமாக அண்ணாமலையில் எழுந்தருள்கிறார். அந்த மலையில் தீபம் எரியும் காட்சியை காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு திரள்வார்கள். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கம் விண்ணை எட்டும். தொடர்ந்து 11 நாள்கள் எரியும் பிரமாண்ட வடிவில் இந்தத் தீபம் அமைக்கப்படுகிறது.
இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருவதைக் காண மலைமீது பக்தர்கள் ஏறுவார்கள். பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு மலை மீது ஏறுவதற்கு 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.