வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே, கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.