கஜா புயல் நெருங்கி வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை மழை பெய்தது. காலை 11 மணி முதல் மிதமான காற்றுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் உள்ளதாகவும், இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு நூறு கிலோ மீட்டரை தொடலாம் எனவும் கூறப்படுகிறது.
கஜா புயல் இன்று மாலை கடலூர் பாம்பன் இடையே கரையை கடக்கும் நிலையில் சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதிகாலையில் வேளச்சேரி , கிண்டி, அனகாபுத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வண்டலூர், பெருங்களத்தூர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்தது. காலை 11 மணி முதல் மிதமான காற்றுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.