நீராவி என்ஜின்களின் சிறப்பான இயக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், தெற்கு ரயில்வேக்கு பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.
இந்திய நீராவி என்ஜின் ரயில்வே சமூகம் சார்பில் 16-ஆவது தேசிய கூட்டம், தில்லியிலுள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது.
இதில், சிறந்த பங்களிப்பு அளித்த நீராவி என்ஜின்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இ.ஐ.ஆர் -21, எக்ஸ்-37392 ஆகிய இரண்டு நீராவி என்ஜின்களை உயிர்ப்பித்ததற்காக தெற்கு ரயில்வேக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
இதை தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் ஏ.கே.கத்பாலிடம், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ்சர்மா, ரயில்வே இணை அமைச்சர் ராஜன் ஹோஹெய்ன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிலையில், இந்த கேடயங்களை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டாவிடம், கத்பால் ஒப்படைத்தார். இ.ஐ.ஆர் -21 நீராவி என்ஜின் 163 ஆண்டுகள் பழைமையானதாகும். இந்த நீராவி என்ஜின் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸில் புதுப்பிக்கப்பட்டது.
எக்ஸ் -37392 நீராவி என்ஜின் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. நீலகிரி மலை ரயில்வேயில் பாரம்பரிய சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டதற்காக இது கௌரவிக்கப்பட்டுள்ளது.