சென்னை: ‘இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை’ என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது. நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து, 10 லட்சம் பேர் வரை, இன்ஜி., படிப்பு முடித்து, பட்டம் பெறுகின்றனர். இவர்களில், 25 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இந்நிலையில், இன்ஜி., பட்டதாரிகளிடையே தகுதியானவர்களை வேலைக்கு தேர்வு செய்யும் வகையில், பட்டம் பெறும் முன், நுழைவு தேர்வு நடத்த உள்ளதாக, வதந்திகள் பரவின. இதுகுறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., நேற்று விளக்கம் அளித்துள்ளது.
அதில் ‘இன்ஜினியரிங் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, வழக்கம் போல பல்கலை தேர்வுகள் வழியே, பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அவர்களுக்கு, படித்து முடிக்கும்போது, நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. அதுபோன்ற வதந்திகளை, நம்ப வேண்டாம்’ என, கூறப்பட்டுள்ளது.