ஆதாரின் புதிய கே.வை.சி. அம்சம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில், சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவின் படி புதிய சிம் கார்டு பெற ஆதார் கார்டு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆதார் கார்டு அல்லது ஆதார் நம்பர் இல்லாமல் புதிய சிம் கார்டு பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
அரசு சான்று பெற்ற அடையாளச் சான்று பயன்படுத்துதல்: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் சான்றின் நகலை சமர்பித்து புதிய சிம் இணைப்பினை பெற முடியும்.
சிம் கார்டு வழங்கும் நிறுவனம் உங்களின் அடையாள சான்றினை ஸ்கேன் செய்தோ அல்லது புகைப்படத்தை எடுத்துக் கொண்டு, உங்களின் கையொப்பத்தை பெறுவர். இங்கு அனைத்து வழிமுறைகளும் டிஜிட்டல் முறையில் அரங்கேறும், இதனால் நெட்வொர்க் ஆக்டிவேஷன் வேகமாக நடைபெறும். சிம் கார்டு வழங்குவோர் பிரத்யேக ஐ.டி. ஒன்றை வைத்திருப்பர், இதை கொண்டு சிம் கார்டு நம்பகத்தன்மை கே.வை.சி. வழிமுறைகளின் போது பயன்படுத்தப்படும்.
பாரதி ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே டிஜிட்டல் கை.வ.சி. வழிமுறையை புது டெல்லி மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் துவங்கி விட்டன. புதிய சட்டத்தின் படி உங்களது சிம் கார்டு இ-கே.வை.சி உடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதாருடன் இணைக்கப்படாத நம்பர்கள் எக்காரணம் கொண்டு டி-ஆக்டிவேட் செய்யப்படாது.
ஆதார் கொண்டு புது சிம் கார்டு பெறுவது: பயனர்கள் தங்களது ஆதார் சான்று பயன்படுத்தியும் புதிய சிம் கார்டு ஆக்டிவேட் செய்ய முடியும். ஆதார் கார்டு இல்லாமல் புதிய சிம் கார்டு பெற முடியும் என்பது தெளிவாகி விட்ட நிலையில், சிம் கார்டு வழங்குவோர் அரசு சான்று பெற்ற அடையாள அட்டையை சான்றாக ஏற்காத பட்சத்தில் பயனர்கள் மத்திய தொலைதொடர்பு ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், புதிய சிம் கார்டுகள், இன்டர்நெட் இணைப்பு அல்லது வைபை உள்ளிட்டவற்றை புதிய கே.வை.சி. வழிமுறைகளின் மூலம் மிக எளிமையாக பெற்றுக் கொள்ள முடியும்.