சென்னை: இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட, வட கிழக்கு மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் மிதமான மழை பெய்துள்ளது.
நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில், 8 செ.மீ., மழை பதிவானது. பழநி 4 திருநெல்வேலி – பாபநாசம், 3; போளூர், சென்னை விமான நிலையம், சத்திரப்பட்டி, ஆனைக்காரன் சத்திரம், மணிமுத்தாறு, பொன்னேரி, கொடைக்கானல், பட்டுக்கோட்டை, குன்னுார், குமாரபாளையம், பெரியநாயக்கன் பாளையம், செங்குன்றம் ஆகிய இடங்களில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில், இன்று பரவலாக மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: கன்னியாகுமரி முதல் தெற்கு ஆந்திரா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கில் நகர்ந்து, கன்னியாகுமரிக்கும், வடக்கு கேரளாவுக்கும் இடையே, நிலை கொண்டுள்ளது.
அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பரவலாக மழை பெய்யும். இந்திய பெருங்கடலின், நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. எனவே மன்னார் வளைகுடாவுக்கு இடைப்பட்ட, தென் மேற்கு வங்க கடல் பகுதிக்குள், நாளை வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு கூறினார்.