சென்னை: ”கூட்டுறவு கடன் நிறுவனங்களில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது” என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
சென்னை கீழ்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை செயல்பாடு தொடர்பாக அமைச்சர் ராஜு அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். பின் அவர் கூறியதாவது: நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 8,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில், தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு கடன் நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 12.45 சதவீதமாக இருந்தது. தற்போது 11.45 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அந்த குழுக்கள் கடனை திரும்ப செலுத்தும் போது ஏற்படும் வட்டி சுமையை குறைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ராஜு கூறினார்.