2017-2018 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மத்திய அரசு காலநீட்டிப்பு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு சென்ற ஆண்டு அமல்படுத்தியது. இது தொழில் முனைவோர் மத்திலில் பல எதிர்மறையான விமர்சனங்களைக் கிளப்பியது. இதனால் நாடு முழுவதும் பல சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் தங்கள் தொழிலைக் கைவிட நேர்ந்தது. அதன் பின் இப்போதுதான் நிலைமை ஓரளவு சரியாகி வருகிறது.
ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் 2017-18ஆம் நிதியாண்டுக்கான தங்களது கொடுக்கல் வாங்கல் மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் ஆகியவற்றை இந்த ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்று செப்டம்பரில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானதல்ல. எனவே ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மார்ச் வரை நீட்டிக்க வேண்டுமென்று வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்ற மத்திய அரசு வரிகள் வாரியம் தற்போது அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதற்கான படிவங்களை விரைவில் ஜிஎஸ்டி பொதுத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.