தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுகள் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50, மொத்த மதிப்பெண் 100 ஆகும். இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதுவும் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றிருந்தவர்களுக்கு 50 மதிப்பெண்கள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் விடைக் குறிப்புகளை வைத்து மீண்டும் திருத்தினர். அப்போது தமிழையே ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பிழையுடனும், தவறுதலாகவும் எழுதியிருந்தனர். அதுமட்டுமன்றி பக்கத்தை நிரப்புவதற்காக கேள்விக்குத் தொடர்பில்லாத பல தகவல்களையும் எழுதி இருந்தது தெரியவந்தது.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, இந்த மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதேநேரம் முறைகேடு குறித்து விசாரணையும் நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *