சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 10 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் 21ம் தேதி இரவு முதல் நேற்று இரவு வரை 10 ஆயிரம் பஸ்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங் களுக்கு இயக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வெள்ளிக்கிழமை இரவு முதல் ஏராளமானோர் வெளியூர் செல்லத் துவங்கினர். அதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இயக்கப்படும் 2,300 பஸ்களுடன் 500 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை செவ்வாய் கிழமை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வசதியாக 10 முதல், 13ம் தேதி வரை 12 ஆயிரம் பஸ்களும் பிற ஊர்களில் இருந்து 10 ஆயிரம் பஸ்களும் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்து, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்ப வசதியாக 15ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தலா, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும். தொலைதுாரம் செல்வோர் எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் www.tnstc.in என்ற அரசு போக்குவரத்து கழக இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ளோர் முன்பதிவு செய்ய வசதியாக ஜன., 9க்குப் பின் 29 முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஐந்து இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். இது குறித்த முறையான அறிவிப்பை அடுத்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.