பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்புப் பேருந்துகள்: தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 2,275 தினசரி பேருந்துகளுடன் கூடுதல் சிறப்புப் பேருந்துகளாக நான்கு நாள்களுக்கு 5,163 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் நான்கு நாள்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,263 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ளன. அதுபோல, இந்த நான்கு நாள்களில் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 10,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு ஜனவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை 3,776 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுபோல, தமிழகத்தின் முக்கியப் பகுதிகளிலிருந்து சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளுக்கு 7,841 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 5 பேருந்து நிலையங்களில் இருந்து பண்டிகைக்கு ஊருக்குச் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக பயணம் செய்யும் வகையில், வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் 5 தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும். அதன்படி, ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

*கிழக்கு கடற்கரைச் சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்துக்கழகப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

*விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

*திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணா மலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

*வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூர் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

*மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, கடலூர், பண்ருட்டி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, உதகை, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

ஜனவரி 9 முதல் முன்பதிவு: பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு மையங்கள், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையம் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள முடியும். www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்-லைனிலும் பேருந்துடிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

வழித்தட மாற்றம்: ஜனவரி 11 முதல் 14- ஆம் தேதி வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இருக்கைகள் அனைத்தும் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்பதிவின்போது தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கிருந்து பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கனரக வாகனங்கள் செல்லத் தடை: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கனரக வாகனங்கள் மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடங்களை தவிர்த்து, வேறு வழிகளில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

அதுபோல ஜனவரி 11 முதல் 14 ஆம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் சென்றால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *