கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் செலுத்துவோர் வசதிக்காக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு பி.ஓ.எஸ்., கருவிகள் வழங்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சொத்து பரிமாற்ற பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்காக 575 சார் – பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
‘ஆன்லைன்’ முறை : இங்கு முத்திரை தீர்வை பதிவு கட்டணம் போன்றவற்றை மக்கள் ரொக்கமாக செலுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட முத்திரை தீர்வை பதிவு கட்டணங்களை, ‘ஆன்லைன்’ முறையில் செலுத்த வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆன்லைன் பதிவு இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
அதேநேரத்தில் கட்டணம் 1,000 ரூபாய்க்குள் இருந்தால் பணமாக செலுத்தும் நிலை தொடர்கிறது. இதில் கணக்கில் வராத பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பதிவுத்துறை அலுவலகங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை 100 சதவீதம் உறுதி செய்ய பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
பி.ஓ.எஸ்., கருவிகள்: இதற்காக சார் – பதிவாளர் அலுவலகங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் வசூலிக்க பி.ஓ.எஸ்., கருவிகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 575 சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கும் வங்கிகளிடம் இருந்து பி.ஓ.எஸ்., கருவிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பிப்., 1ல் நடைமுறைக்கு வரும் என பதிவுத் துறை அதிகாரிகள் கூறினர்.