செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் அறிவியல் தொடர்பான பயிற்சி சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை தொடங்கியது.
தொடர்ந்து எட்டு நாள்கள் நடைபெறும் இந்த பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசியதாவது:
நாட்டில் நரம்பியல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை மேம்பட இதுபேன்ற பயிலரங்குகள் மிகவும் அவசியம். உலகம் முழுவதிலுமிருந்து இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்று சொற்பொழிவாற்ற உள்ளனர். இது பயிலரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதோடு, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இந்த துறை அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் வழிவகுக்கும் என்றார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், நரம்பியல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை வரும் காலங்களில் மிகப் பெரிய வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்போகிறது. டிஜிட்டல் கணினி உலகின் அடுத்தகட்டமாக பார்க்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவுத் துறை, இன்றைக்கு தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டஇந்தப் பயிற்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த 30 மாணவர்கள் உள்பட 400 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.