2018 – 19ம் ஆண்டிற்கான அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் மானியம் பெற இன்று முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தத் திட்டத்தில், அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத்திற்கு மானியத் தொகையாக, அதிகபட்சம் 31 ஆயிரத்து 250 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இவற்றில் எது குறைவோ, அத்தொகை வழங்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சொந்த முதலீடு அல்லது வங்கிக் கடன் பெற்று, இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 சிசி.,க்கு மிகாமல், மோட்டார் வாகன சட்டத்தில் பதிவு செய்யக்கூடிய வாகனத்தை வாங்க வேண்டும்.