தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், வரும் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், வரும் 25-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். 26-ம் தேதியும் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் இரவில் உறைபனி கொட்டும். சென்னை, சுற்றுப்புறப் பகுதிகளில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் மூடுபனி நிலவும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.