சென்னை: வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வரும் கட்டணங்களை ரொக்கமாக பெறுவதற்கு பதில் சார்பதிவாளர்கள் பிப்.1ம் தேதி முதல் பிஓஎஸ் கருவியை பயன்படுத்தி வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், ₹ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் லட்சக்கணக்கில் ரொக்கமாக பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பணம் இல்லாத பரிவர்த்தனை கொண்டு வர தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் பிஓஎஸ் (பாயின்ட் ஆப் சேல்) கருவி நிறுவப்படவுள்ளது.தமிழகம் முழுவதும் ஒரு அலுவலகத்துக்கு 1 பிஓஎஸ் என 575 கருவி வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து கட்டணத்தை ரொக்கமாக இல்லாமல் பிஓஎஸ் கருவி மூலம் வசூலிக்கும் முறை பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் பிஓஎஸ் கருவி பாரத ஸ்டேட் வங்கி வழி அமைக்கப்படவுள்ளது. இந்த பிஓஎஸ் கருவியை பயன்படுத்தி ₹ஆயிரத்திற்கு குறைவாக அரசுக்கு ெபாதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தினை வசூலிக்கலாம். பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அட்டைகளை பயன்படுத்தி கட்டணங்களை அரசுக்கு எதிராக செலுத்தலாம்.
அனைத்து கட்டணங்களும் மின்னணு முறையில் பெறப்படும் பட்சத்தில் செலுத்துச்சீட்டுகளை தயாரித்து வங்கிகளுக்கு சென்று பணம் செலுத்தும் பணியை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் அலுவலர்களின் நேரம் மிச்சமாவதுடன் short remittance என்ற நிலையே இல்லாமல் செய்வதுடன் அலுவலர்கள் பணத்தை கையாள வேண்டிய சிரமமின்றி பாதுகாப்பாக பணிபுரியலாம். இந்த கருவிகளை நிறுவி இயக்கும் முறை தொடர்பான பயிற்சி பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.