வண்ணாரப்பேட்டை- ஏஜி டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வந்தன. இதில், இரண்டாவது வழித்தடப் பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. முதல் வழித் தடத்தில், வண்ணாரப்பேட்டை- தேனாம்பேட்டை
(ஏஜி டி.எம்.எஸ்) இடையே 10 கி.மீ. தூரத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கப்பாதைப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் ஜனவரி 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை சுட்டிக்காட்டி பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் ஒருவாரத்தில் முடிந்தது. இதையடுத்து, ரயில் சேவையை தொடங்க பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மனோகரன் ஒப்புதல் கொடுத்துவிட்டார். தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி கோரியுள்ளது. இந்த அனுமதி கிடைத்தபிறகு, பிப்ரவரி 10-ஆம் தேதி ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் வரும் 10-ஆம் தேதி பங்கேற்கிறார். அப்போது, மெட்ரோ ரயில் சேவையை மோடி தொடங்கி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.