சென்னை: சென்னை மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது. கலங்கரை விளக்கத்திலிருந்து மைலாப்பூர், நந்தனம், தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் வரை பூமிக்கடியில் இந்த பாதை அமையும்.
முன்னதாக, வடபழனி, சாலிக்கிராம பாஸ்போர்ட் அலுவலகம், விருகம்பாக்கம், கோயம்பேடு மற்றும் கோயம்போடு பேருந்து முனையம் வரை பாதை அமைப்பதற்காக திட்டமிடப்பட்டது. தற்போது, கோயம்பேடு, விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், போரூர், ஐயப்பன்தாங்கல், கரையான்சாவடி வழியே பூந்தமல்லியை அடையும் வகையில் பாதை அமைக்கப்படுகிறது.
இதனையடுத்து, களங்கரைவிளக்கத்திலிருந்து கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியிலிருந்து பூந்தமல்லி வரையிலான 16 கி.மீ தொலைவுக்கு பூமிக்கு அடியில் பாதை அமைக்கப்படும். இந்த இடைப்பட்ட தொலைவில் 18 ரயில் நிலையங்கள் அமையும்.
இதற்கான மண் பரிசோதனை நடத்தவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. பூந்தமல்லி புறநகர் பகுதியிலிருந்து பணிக்கு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கத்திலிருந்து மைலாப்பூர், நந்தனம், தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் வழியே கோயம்பேடு பேருந்து முனையம் வரை பாதை அமைப்பதற்காக முன்னர் திட்டமிடப்பட்டது. அதன்பிறகுதான், ரூ,3,850 கோடி மதிப்பீட்டில் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து பூந்தமல்லி வரை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
கோயம்பேட்டிலிருந்து மாதவரம் வழியாக சோளிங்கர் வரையிலான 52 கி.மீ தொலைவுக்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 55 கி.மீ தொலைவு வரையிலான பணிக்கு 4 சர்வதேச வங்கிகளிடம் கடனுதவியை கோரியுள்ளோம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.