சென்னை: ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாட்களில் முக்கிய புனித தலங்களில் மக்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் பித்ருக்களின் தோஷம் அகலும் என்பது ஐதீகம். இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள புனித தலங்களில் இந்துக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தெப்பக்குளத்தில் பழம், காய்கறிகள் படையல் வைத்தனர். புரோகிதர்கள் மந்திரம் ஓத, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதுபோல் காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள முக்கிய கோவில்களில் மக்கள் திதி கொடுத்தனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் முக்கடல்கள் இணையும் திரிவேணி சங்கமத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். தை அமாவாசையையொட்டி குமரிக் கடற்கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தை அமாவாசையையொட்டி குற்றாலம், குற்றாலநாதர் கோவிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மெயினருவியில் புனிதநீராடிய பக்தர்கள் அருவிக்கரையில் அமர்ந்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கும்பகோணம் மகாமகக்குளம், மற்றும் பாபநாசம் தாமிரபரணியில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனிதநீராடினார். இதே போல பாவனி கூடுதுறை, திருவண்ணாமலை, கோடியக்கரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஏராளமானோர் முன்னோர்களை வழிபட்டனர்.