சாலைப் பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பாக நடவடிக்கை எடுக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்துக்கும் இந்த ஆண்டில் இருந்து ‘முதல்வர் விருது’ வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி அவர் நேற்றுவெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, 30-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 4-ம் தேதி (இன்று) முதல்10-ம் தேதி வரை, ‘சாலைப் பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் உள்ளிட்டவை நடக்க உள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலை பாதுகாப்புக்கென ஆண்டுக்கு ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது. அவசர விபத்து சிகிச்சை மைங்கள் அமைத்தல், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்துக் குழுக்கள் அமைத்து போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சிறுவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்குதல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன் காரணமாக 2017-ம் ஆண்டைவிட, 2018-ம் ஆண்டு, சாலை விபத்துகள் 3 சதவீதம் குறைந்துள்ளன. சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் 25 சதவீதம் குறைந்துள்ளன.
சாலைப் பாதுகாப்புப் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பாக நடவடிக்கை எடுக்கும் முதல் 3 மாவட்டங்ளுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்துக்கும் ‘முதல்வர் விருது’ இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் மிதமான வேகத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.
வாகனங்களில் பயணம் செய்வோர் தலைக்கவசம், சீட் பெல்ட்களை அணிய வேண்டும். வாகனங்களை ஓட்டும்போதும் கைபேசியை பயன்படுத்தக் கூடாது. சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, தங்கள் உயிர்களை பாதுகாத்து விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்.