போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (10.03.19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மட்டும் சுமார் 7.13 லட்சம் குழந்தைகளுக்காக, 1,644 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாளை நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் குழந்தைகளுக்கு பெற்றோர் சொட்டு மருந்து போட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களிலும், மெரினா கடற்கரை, சுற்றுலாப் பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலும் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு நாளை சொட்டு மருந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இதற்கான பணிகளில் ஈடுபட உள்ளனர். காலை 7.00 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5.00 மணி வரை தொடர்ந்து முகாம் நடைபெற உள்ளது.