மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். எனவே, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தல் வேண்டும். இதற்கான சேவை கட்டணமாக தபால்காரரிடம் 70 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும், https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது ‘Postinfo’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதிலும் சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *