கேரள மாநிலம், சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நவம்பர் 17-ம் தேதி துவங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தா்களின் பாதுகாப்புக்காக தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கத்திற்கு பின் யாத்திரை நடைபெறுவதால், நிகழாண்டு யாத்திரையில் பக்தா்கள் வருகை அதிகமிருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகவே, ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தா்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை நிா்வகிப்பதற்காக சுமாா் 14,000 காவல் துறையினா் பணியமா்த்தப்படவுள்ளனா். 134 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ட்ரோன்கள் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 3 தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மோட்டாா் சைக்கிள்கள் மூலம் ரோந்து பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கேரள சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள், 15 அல்லது அதற்கு மேற்பட்டோா் பயணிக்கும் வசதி கொண்ட வாகனங்கள் மட்டுமே நிலக்கல்லை தாண்டி பம்பை வரை சென்றுவர அனுமதிக்கப்படும். இதர தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.