சபரிமலையில், பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக உடனடி முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க தினசரி தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதனால் நேற்று மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது, “சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நேற்றைய தினம் ஏற்கனவே (கட்டுப்பாடுக்கு முந்தைய) 1 லட்சத்து 4 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள். இதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி தரிசன முன்பதிவு வசதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.