சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. மேலும், வரத்து அதிகரிப்பு காரணமாக, கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை சுமார் 600 வாகனங்களில் 6,200 டன் காய்கறிகள் வந்தன. இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.40ல் இருந்து ரூ.20க்கும், நவீன் தக்காளி ரூ.30 லிருந்து ரூ.13 க்கும், கேரட் ரூ.40 லிருந்து ரூ.10க்கும், கோஸ் ரூ.20 லிருந்து ரூ.5க்கும், பச்சை பட்டாணி ரூ.120 லிருந்து ரூ.25க்கும், சவ்சவ் மற்றும் முள்ளங்கி ரூ.20 லிருந்து ரூ.10க்கும், வெண்டைக்காய் ரூ.45 லிருந்து ரூ.25க்கும், கத்திரிக்காய் ரூ.30 லிருந்து ரூ.15க்கும், பீட்ரூட் ரூ.30 லிருந்து ரூ.15க்கும், எலுமிச்சம் பழம் ரூ.90 லிருந்து ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள் வரவில்லை. காய்கறிகள் விலை குறைந்ததால் சில்லரை வியாபாரிகள், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இவ்விலை சரிவால், கோயம்பேடு வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர் என்று கோயம்பேடு மார்க்கெட் சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்எஸ். முத்துகுமார் தெரிவித்துள்ளார்.