சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைப்பட திரைக்கதை ஆசிரியருமான ஜெயகாந்தன் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80

கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவருக்கு நேற்று இரவு திடீரென கடுமையான காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சென்னை கே.கே. நகரில் உள்ள ஜெயகாந்தனின் வீட்டில் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இலக்கிய உலகின் மிக உயரிய, ‘ஞான பீடம்’ விருது பெற்ற, ஜெயகாந்தன், வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஜீவாவுடன் ஏற்பட்ட நட்புக்கு பின்னர் ஜெயகாந்தன் முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பலவித அவதாரங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய ஜெயகாந்தன், திரையுலகிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். அவர் எழுதிய ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், சினிமாவுக்கு போன சித்தாள், உன்னை போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர் ஆகிய நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்ற ஜெயகாந்தன் அதன் பின்னர் ரஷ்யாவின் ‘ஆர்டர் ஆப் பிரெண்ட்ஷிப் (Order of Friendship) என்ற விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Jeyakanthan legendary writer passed away in Chennai