இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதை நினைவுகூரும் விதமாக சிறப்பு அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அஞ்சல் தலைகள் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: இந்தியா-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. விண்வெளி ஆராய்ச்சியில், இந்த இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பு 50 ஆண்டுகளாக தொடருகிறது.
ஐரோப்பிய நாட்டுடனான இந்த நல்லுறவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விண்வெளி ஆராய்ச்சியில், இரு நாடுகளின் 50 ஆண்டு கால ஒத்துழைப்பை நினைவுகூரும் விதமாக, அஞ்சல் துறை சார்பில் இரண்டு அஞ்சல் தலைகள், அஞ்சல் குறுந்தாள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு நினைவு அஞ்சல் தலை, அஞ்சல் குறுந்தாள் விற்பனைக்கு கிடைக்கும். அஞ்சலக சேமிப்பு வங்கியில் கணக்குத் தொடங்கும் நபர்களுக்கு, அவர்களின் வீட்டிற்கே நேரிடையாக சிறப்பு அஞ்சல் தலைகள் விநியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.