இந்த ஆண்டின் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால், மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். கேள்விகள் பல்குறித்தேர்வு (Multiple choice Questions) வினாக்களாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு வினாவிற்கு சரியான விடை உட்பட நான்கு விடைகள் இடம்பெறும்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, உருது, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் போதே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.