சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வாக, புதிய பார்க்கிங் சிஸ்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகரில் வாகனங்களை நிறுத்துவதில் பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொள்கிறார்கள். எனவே, இதற்கு தீர்வுகாணும் வகையில் சாலையோரங்களில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாநகராட்சி தீவிரம் காட்டிவருகிறது. அரசு போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் இயங்குகின்றன.
இதனால், மாநகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடை வீதிகளில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், வீடு, அலுவலகங்களுக்கு வெளியே சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இவ்வாறு சாலையோரங்களில் நிற்கும் வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக்நகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான இடம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னை மாநகரில் வாகனங்களை நிறுத்துவதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில் சாலையோர பார்க்கிங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், சி.பி.ராமசாமி சாலை, தி.நகரில் இருக்கும் டாக்டர் நாயர் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான நெரிசல் இருக்கிறது.
எனவே, இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் 10 வணிக வளாகங்களின் விவரங்களை சேகரித்திருக்கிறோம். இங்கு காலியாக இருக்கும் இடங்களில் பார்க்கிங் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். இது செயல்பாட்டுக்கு வந்தவுடன் அந்த பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வரும். அப்போது அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும். இந்தத் திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து செய்கிறோம். இதேபோல் சென்னை மாநகராட்சி சாலைகளில் வாகனம் அதிகமாக நிறுத்தப்படும் தெருக்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகிறோம். அதில் சாத்தியமுள்ள பகுதிகளில் பார்க்கிங் அமைக்கப்படும்,’’ என்றார்.
கூடுதல் வருவாய் இந்த பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு காவல்துறையுடன் இணைந்து உரிய பாதுகாப்பு வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி, மாநகராட்சிக்குச் சொந்தமான பார்க்கிங் பகுதிகளில் இருந்து வசூல் செய்யப்படும் கட்டணம் தினமும் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை இருக்கிறது. புதிதாக பார்க்கிங் பகுதிகள் அமைக்கப்படுவதன் மூலம் இந்த வருவாய் மேலும் அதிகரிக்கும்.
புதிதாக அமைக்கப்படும் ஒவ்வொரு பார்க்கிங் பகுதியிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சென்சார் கருவி பொருத்தப்படும். இது உள்ளே நுழையும் வாகனத்தின் பதிவு எண்ணை உடனடியாக சேகரித்து, ரசீது வழங்கும் கட்டண மீட்டருக்கு அனுப்பி வைக்கும்.