தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி மக்களை வாட்டி எடுத்து வருகிறது. வெயிலின் தாக்கம் அடுத்த வாரம் முதல் படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது;- தமிழகம், புதுச்சேரியில் இன்று 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை 18-ம்தேதி முதல் 2 நாட்கள் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 18, 19 ஆகிய 2 நாட்களும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போன்று திருச்சி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 18-ந்தேதியும் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 19-ந்தேதியும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே தென்மேற்கு பருவமழையும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 8-ந்தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து குற்றாலம் மலை பகுதிகளிலும் மழை பெய்திருந்தது. இதனால் கடந்த வாரம் குற்றால சீசனுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. பின்னர் சீசன் அறிகுறிகள் தற்போது இல்லை. இருப்பினும் இன்னும் சில தினங்களில் சீசன் முழுமையாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *