சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பி.என். பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், வி.எஸ்.ரவி, ஜி.சொக்கலிங்கம் ஆகியோர்களும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் வி.எம்.வேலுமணி என்பவரும் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

இவர்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட உயர்நீதிம்னற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதை தொடர்ந்து, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்கூறிய நீதிபதிகள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து கடந்த 11ஆம் தேதி உத்தரவிட்டார்.

குடியரசு தலைவரின் உத்தரவை அடுத்து நேற்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களின் அறையில், எளிமையான முறையில் மேற்கண்ட நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். மத்திய அரசு அனுப்பிய அறிவிக்கை மற்றும் குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு ஆகியவைகளை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வாசிக்க, தலைமை நீதிபதி அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துக் கொண்டு, நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

English Summary : Madras High Court and the inauguration of the permanent judges