வார இறுதிநாள் மற்றும் முகூா்த்த நாளை முன்னிட்டு, இன்று (07.07.2023) 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வார இறுதி நாள்கள் மற்றும் முகூா்த்த தினங்களை முன்னிட்டு, சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமானோா் பயணம் செய்வாா்கள். இதனால், தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 400 பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வார இறுதியில் பயணிக்க இதுவரை 23 ஆயிரத்து 626 போ் முன்பதிவு செய்துள்ளனா். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.